×

மாவட்டத்தில் 110 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 25,618 பேர் எழுதுகின்றனர்

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இவ்வாண்டு 25,618 மாணவ, மாணவிகள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 1ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 197 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,156 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 பொதுத் தேர்வினை 21,945 மாணவ, மாணவிகள் 85 மையங்களில் எழுதி வருகின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வருகிற 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு பெற வேண்டும் என கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியரை தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார் செய்து வருகின்றனர். திருப்பு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்விற்கான முகப்புதாள், விடைத்தாள் ஆகியவை சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை இணைத்து தைத்து, தேர்வு மையங்கள் செயல்படும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 396 அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், 110 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 7,248 மாணவர்களும், 6,786 மாணவிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 5,758 மாணவர்கள், 5,826 மாணவிகள் என மொத்தம் 13,006 மாணவர்களும், 12,612 மாணவிகளுமாக மொத்தம் 25,618 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.

எந்தெந்த பள்ளி மாணவர்கள், எந்தெந்த மையங்களில் தேர்வு எழுத வேண்டும் என்ற விபரங்களும், அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த விபரங்களை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தேர்வு நடைபெறும் மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம், அந்த மையத்தில் தேர்வு எழுத உள்ள பிற பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் விடைத்தாள் முகப்பு பக்கங்களும் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வருகிற 26ம்தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரின் முகப்பு பக்கங்கள், விடைத்தாள்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்துடன் விடைத்தாள்களை தைத்து, தேர்வின் போது மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இந்த பணிகளை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். விடைத்தாள்களை தலைமை ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிக்கு தேர்வு பணிக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைப்பார்கள்,’ என்றனர்.

The post மாவட்டத்தில் 110 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 25,618 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...